கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு
Published on

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

சிறுமி மாயம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.

சிப்காட் பகுதியொட்டிய புதுப்பேட்டை கிராமத்தில் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை இந்த பகுதியில் வசித்த வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை தேடி வந்தனர்.

பாலியல் வன்கொடுமை

அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் மாயமான சிறுமி பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தாள். மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

வடமாநில வாலிபர்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியில் தங்கி வேலைபார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (வயது19) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிபின் மஞ்சியை கைது செய்தனர். எனினும் கைதான வாலிபர் தங்கி இருந்த அறையில் மேலும் 4 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று இரவு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கைதான வடமாநில வாலிபருடன் ஒரே அறையில் மேலும் 4 வடமாநில வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முள்புதரில் வீசி உள்ளனர்.

போலீசார் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது வீடுகளிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் உள்ளனர். காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புகிறோம். எங்களது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றனர். பொதுமக்களின் இந்த போலீஸ்நிலைம் முற்றுகை போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

சிறுமி உயிரிழப்பு

இதற்கிடையே சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று காலை பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து சிறுமி வசித்து வந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை நீடிக்கிறது.

கைதான வாலிபரை தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமையா?

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுமி இறந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததா? என்பது தெரியவரும். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையும் உருவாக்கப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கிராம மக்கள் மறியல்

இற்கிடையே சிறுமி இறந்தது பற்றி அறிந்ததும் புதுப்பேட்டை பகுதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்று 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எனினும் கிராம மக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவு உள்ளதால் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

அப்போது போலீசார் தெரிவித்த கருத்தால் ஆத்திரம் அடைந்த பெண்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com