

கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சி. புதுப்பேட்டை சண்முகா நகரை சேர்ந்த ரவி என்கிற ரமேஷ்(வயது28), அதே பகுதியை சேர்ந்த மனோகர்(27), புதுவை மாநிலம் கனகச்செட்டி குளம் தெற்கு தெருவை சேர்ந்த நாகவேல்(40) ஆகியோர் கடந்த 2-ந் தேதி மதியம் 2.30 மணியளவில் புதுப்பேட்டை இந்திரா நகர்பகுதியை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் அடுத்த நாள்(3-ந் தேதி) கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் மாயமான மீனவர்களை படகில் தேடி சென்றனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவ கிராம பொதுமக்கள் பரங்கிபேட்டை அருகே உள்ள அன்னங்கோவில் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து மீனவ துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது கடலோர காவல் படை மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். ஆனால் மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மீனவத்துறை அதிகாரிகள் விரைந்து அவர்களை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் மாயமான சம்பவம் மீனவ கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.