சென்னையில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம்-முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்!

இந்த பிரம்மாண்டக் கணக்கெடுப்பு ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 Census Training Camp in Chennai
Published on

இந்தியாவின் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் களப் பயிற்சியாளர்களுக்கான மூன்று நாள் தீவிரப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

ஐந்து மையங்களில் இரு கட்டங்களாக நடைபெறும் இப்பயிற்சியில், மாநகராட்சியின் உதவிப் பொறியாளர்கள், வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 256 உயர் அதிகாரிகள் முதன்மைப் பயிற்சியாளர்களாகத் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் பயிற்சி பெறும் 11,000-க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 1,800 கண்காணிப்பாளர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை முழுவதும் வீடு வீடாகச் சென்று நேரடியாகக் களப்பணியில் ஈடுபடவுள்ளனர்.

இந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாக, இந்த 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மொபைல் செயலி மற்றும் இணையதளம் வழியாக நடத்தப்படவுள்ளது. காகிதப் படிவங்களுக்குப் பதிலாக, கணக்கெடுப்பாளர்கள் தங்களின் மொபைல் போன்களிலேயே தரவுகளை நேரடியாகப் பதிவேற்றம் செய்யவுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் தங்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளும் சுய-விவரப் பதிவு வசதியும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டக் கணக்கெடுப்பு ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, வரவிருக்கும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் பட்டியல் தயாரித்தல், வீடுகளின் தரம் மற்றும் குடும்பத்தின் வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். இதற்கு முன்னதாக, ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை பொதுமக்கள் தங்களின் விவரங்களை ஆன்லைனில் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 2027 பிப்ரவரி மாதத்தில் தனிநபர்களின் வயது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதன்முறையாக விரிவான சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட முழுமையான மக்கள் தொகை விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள சுமார் 85 லட்சம் மக்களின் விவரங்களைத் துல்லியமாகச் சேகரிப்பதன் மூலம், எதிர்கால நலத்திட்டங்களைச் சிறப்பாகத் திட்டமிட இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு உதவும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com