

உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு ஆவடி சின்னம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 7 மணி அளவில் தயார் செய்யப்பட்ட உணவு அந்தந்த மண்டல அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டலம் 3-ல் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் உணவு வழங்கப்பட்டது.
அப்போது சாம்பாரில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது. இதனை சாப்பிட்ட தூய்மை பணியாளர்களுக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகியோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு லேசான பாதிப்பு இருந்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் உணவுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும் போது, கடந்த சிலநாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவு சுகாதாரமாக இல்லை. உணவில் அடிக்கடி பூச்சிகள் கிடக்கின்றன. மேலும் சாப்பாடு சரிவர வேக வைக்காமல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.