

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பெருமளவில் போராடவில்லை என்றால், இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நீண்ட காலம் தொடர்ந்திருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய சம்பர்க் பிரமுக் ராம்லால் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது தெரிவித்துள்ளார்.
1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் நீடித்த அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆவர். இதில் தானும் 8 மாதங்கள் சிறையில் இருந்ததாக ராம்லால் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் சத்தியாகிரகம் (அகிம்சை போராட்டம்) போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால், இந்திரா காந்தி அரசு 1977-ல் பொதுத்தேர்தலை அறிவித்திருக்காது. எதிர்க்கட்சியான ஜனதா கட்சியும் ஆட்சிக்கு வந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.
போர் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களுடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர். ஒரு போரின்போது, எதிரி எல்லைக்கு அருகே தவறி விழுந்த ராணுவ தளவாடங்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தவழ்ந்து சென்று மீட்டனர். இந்த ரகசியப் பணியில் 4 தொண்டர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.
1965 போரின்போது, வெறும் 24 மணி நேரப் பயிற்சியுடன் டெல்லியின் ஒட்டுமொத்த போக்குவரத்தையும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கையாண்டனர். அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தபோது மிகக் குறைந்த விபத்துகளே பதிவாகின. மேலும், 1962 போருக்குப் பிறகு 1963 குடியரசு தின அணிவகுப்பில் 3,000 தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்த பல லட்சக்கணக்கான மக்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் உதவியால் மட்டுமே தாங்கள் இன்று உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இன்று இந்தியாவிற்கு எதிராகப் பேசுபவர்கள் 'முற்போக்காளர்கள்' என்றும், இந்துத்துவம் மற்றும் தேசப்பற்று பற்றி பேசுபவர்கள் 'குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்' என்றும் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தேசப்பற்றை எதிர்க்கட்சியினர் நேரில் ஒப்புக்கொண்டாலும், அரசியல் காரணங்களால் அதை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள்.
முகலாயர்கள் இந்தியாவை கொள்ளையடித்து, மதமாற்றம் செய்து, கோயில்களை அழித்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல், நம்மிடையே தாழ்வுமனப்பான்மையை விதைத்தனர். இந்த அடிமைத்தன சிந்தனையை மாற்றவே ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் இந்த அமைப்பைத் தொடங்கினார்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை கற்பனை என்று கூறுவதை ஏற்க முடியாது. ராமனையும் கிருஷ்ணனையும் இந்திய சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாது.
மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். ஆனால் இந்தியாவில் அது ஒரு புனிதமான 'சமஸ்காரம்'. நவீனமயமாக்கல் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே நகலெடுப்பது அல்ல என்று ராம்லால் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.