

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒற்றை விமர்சனத்தால் உருவாகி, தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் இயக்கம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
அரசியல் கட்சிகள்கூட அமைதியாக இருந்தநிலையில், நைய்யாண்டி இயக்கமாக உருவான ஒரு அமைப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி, அந்தப் போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முன்னிறுத்தி ஜூன்.20ம் தேதி தொடங்கிய போராட்டம், பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை.25 முடிவுக்கு வந்தது.
கிட்டத்தட்ட 36 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜக மற்றும் வலதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியும், பா.ஜ.க அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.
"பத்ரிகா" யூடியூப் சேனலில் அவர் வெளியிட்ட வீடியோக்களில்.,
அதிகாரம் தன் கையில் இருந்திருந்தால், அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மூன்று முறை எச்சரிக்கை விடுத்து, அதன்பிறகும் கலைந்து செல்லாவிடில் "அவர்களை சுட்டிருப்பேன்" என்று கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறப்பார்கள், சிலர் காயமடைவார்கள், நான்கு மணி நேரத்தில் நிலைமை சரியாகிவிடும், அதன் பிறகு உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்துப் பேசிய மற்றொரு வீடியோவில்,
போராட்டங்களில் கலந்துகொள்ளும் முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரிப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள் என்றும், அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்றும் மிகவும் மோசமான, இழிவான தனது கேவலமான மனநிலையை, புரிதலை வெளிப்படுத்தியிருந்தார்.
மோகன்தாஸின் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பிற அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் சைபர் போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, மோகன்தாஸ் அமைப்பின் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை என்றும், அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அவருடைய சொந்தக் கருத்துக்கள் மட்டுமே என்றும், அதற்கும் தங்கள் அமைப்புக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.