

வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தங்களுக்கு பிடித்த உணவுகளை ஓட்டல்களில் ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு வகை உணவுகள் கொண்டு வரப்படுவதும், இதுதொடர்பாக வாடிக்கையாளருக்கும், உணவு வினியோக நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தன.
அதற்கு மாறாக வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த உணவு, காலியான நிலையில் உணவகத்தில் இருந்த வேறு உணவு வகையை அனுப்பியதோடு, அதனுடன் அனுப்பிய குறிப்பு மற்றும் உணவுக்காக வித்தியாச தொகை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வீடியோவில் ஷிரியா என்பவர் தான் ஒரு தட்டு சீஸி மோமோஸ் ஆர்டர் செய்ததாக கூறுகிறார். ஆனால், ஆர்டர் தயாராகும் நேரத்தில் அந்த உணவு வகை தீர்ந்துவிட்டது. ஆர்டரை ரத்து செய்வதற்கோ அல்லது அவருக்குத் தெரிவிக்காமல் வேறொன்றை மாற்றி வைப்பதற்கோ பதிலாக, உணவகம் சாதாரண 'க்ரஞ்சி மோமோஸ்' வகையை பேக் செய்து, விலை வித்தியாசத்திற்காக 20 ரூபாயை திரும்ப அளித்தது. பார்சலை பிரித்தபோது, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கையால் எழுதப்பட்ட குறிப்பை ஷ்ரியா கண்டார். அதில், "சீஸி மோமோஸ் கையிருப்பில் இல்லை, அதனால் சாதாரண க்ரஞ்சி மோமோஸை அனுப்பி உள்ளோம். விலை வித்தியாசத்திற்கான 20 ரூபாய் பார்சலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. நன்றி" என்று எழுதப்பட்டிருந்தது.
திரும்ப அளிக்கப்பட்ட தொகை சிறியதாக இருந்தாலும், அந்த செயலுக்குப் பின்னால் இருந்த நேர்மையே முக்கியமானது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டனர்.