வனவிலங்குகள் மீட்பா?.. கடத்தலா?.. மர்ம தேசமாக மாறும் ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்கா!

வனவிலங்குகள் மீட்பா?.. கடத்தலா?.. மர்ம தேசமாக மாறும் ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்கா!

இவை வெனிசுலா, காங்கோ போன்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்கள் மூலம் பெறப்பட்டிருக்கலாம்.மகாராஷ்டிரா ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நடத்தி வரும் 'வந்தாரா' அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. 2024 இல் பிரதமர் மோடி இந்த மையத்தை திறந்து வைத்தார்.  இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது. 

இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

இதற்கிடையில் வந்தாரா உலகின் மிகப்பெரிய விலங்கு கடத்தல் மையமாக இருக்கலாம் என்று சில அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக ஜெர்மன் நாளிதழான Süddeutsche Zeitung (SZ) கடந்த மார்ச்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், வந்தாராவில் 39,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கலாம் என்றும், இதில் 181 சிங்கங்கள், 200-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் மற்றும் யானைகள், அரிய மற்றும் அழிந்து வரும் வனவிலங்குகள் ஆகியவை அடங்கும் என்று கூறப்படிருந்தது.

இவை வெனிசுலா, காங்கோ போன்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்கள் மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றும், இது சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வந்தாரா தொடர்ந்து மறுத்து வருகிறது. அங்குள்ள அனைத்து விலங்குகளும் சட்டப்பூர்வமாக, பிற விலங்கியல் நிறுவனங்கள், மீட்பு மையங்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து மீட்கப்பட்டவை என்றும் அவை உரிய அனுமதி பெற்று கொண்டுவரப்பட்டவை என்றும் வந்தாரா கூறுகிறது.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விலங்கு உரிமைகள் குழுக்களின் கூட்டமைப்பான WAPFSA, வந்தாராவிற்கு வனவிலங்குகள் ஏற்றுமதி குறித்து விசாரிக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் எழுதியது.

மேலும், மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் ஜெயின் கோவிலின் 36 வயது யானையான ' மகாதேவி' வந்தாரா உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது சர்ச்சையாகி வருகிறது.

மகாதேவி யானை, ஊர்வலகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிச்சை எடுக்க வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான 'PETA' போட்ட வழக்கு பல மாதங்கள் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே யானையை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

இதையடுத்து வந்தாரா உயிரியல் பூங்காவிற்கு மகாதேவி யானை மாற்றப்பட்டிருக்கிறது. இது இப்போது மகாராஷ்டிரா ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 'யானையை துன்புறுத்தவில்லை. அது எங்கள் கோவிலில் அன்புடன் வளர்க்கப்பட்ட கோவில் யானை. அதை மீட்டெடுக்க வேண்டும்' என்று ஜெயின் சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யானையை அரசு பூங்காவுக்கு மாற்றவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மகாதேவி யானையை அம்பானி குடும்பதினர் தங்களின் ஆடம்பர விழாக்களில் நடனமாட, பொருட்காட்சியாகப் பயன்படுத்துவார்கள் என்றும் ஜெயின் சமூகத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com