இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!

எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள்.
Raj Thackeray
Raj Thackeray
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா மிகச்சிறப்பாக வளர்ந்து வருவதாகப் புகழும் நடிகர்கள் விவேக் ஒபராய்மற்றும் ஆர். மாதவன் ஆகியோர், ஏன் இந்தியாவை விட்டுவிட்டு துபாயில் குடியேறியுள்ளனர் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற MNS கட்சியின் மாணவர் பிரிவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் தாக்கரே, மத்திய பாஜக அரசின் கொள்கைகளையும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையையும் கடுமையாக விமர்சித்தார்.

துபாயில் குடியேறியது ஏன்?

கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "2019 ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மோடியாக நடித்த நடிகர் விவேக் ஒபராய், இப்போது துபாயில் வசிக்கச் சென்றுவிட்டார். அதேபோல் பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசும் நடிகர் ஆர். மாதவனும் துபாயில்தான் தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசாக்குகிறார் என்றும், இங்கு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்றும் இவர்கள் நம்பினால், ஏன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழ வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இவர்கள் இந்தியாவுக்கு வந்து பிரபலமான திரைப்படங்களில் நடித்துவிட்டு, சம்பாதித்த பணத்துடன் மீண்டும் துபாய்க்கே சென்றுவிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் ஏற்கனவே தங்கள் தொழில்களை மூடிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர்களின் விளக்கம்?

ராஜ் தாக்கரேவின் இந்த விமர்சனங்களுக்கு நடிகர்கள் தரப்பில் ஏற்கனவே காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில், தனது மகனின் நீச்சல் விளையாட்டுப் பயிற்சிக்காக துபாய்க்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்ததாக ஆர். மாதவன் குறிப்பிட்டிருந்தார்.

அங்கு தனது புதிய தொழில் மற்றும் வணிக முயற்சிகளைத் தொடங்குவதற்காகவே துபாயில் குடியேறியதாக விவேக் ஓபராய் தெரிவித்திருந்தனர்.

அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு குறித்து பேச்சு

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற 'காக்ரோச் ஜனதா கட்சி' போராட்டங்களில் ஈடுபட்டபோது பிரதமர் மோடிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட தரம் தாழ்ந்த மொழிகள் தவறானவை என்று ராஜ் தாக்கரே ஒப்புக்கொண்டார்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் தாக்கரே குடும்பத்தினர் வரை அனைவரையும் பாஜாகவின் 'டிரோல்'குழுக்கள் மிக மோசமாக விமர்சிப்பதாகக் கூறினார். "எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்வீர்கள்.

பாஜாகவினர் முதலில் தங்களது ஆதரவாளர்களை மற்றவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவதை நிறுத்தச் சொல்ல வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் என்பது மாணவர் போராட்டத்திற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே என்றும், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மனதில் சேர்ந்த ஏமாற்றங்களின் வெளிப்பாடே இந்தப் போராட்டம் என்றும் ராஜ் தாக்கரே தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com