யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
 Nirmala Sitharaman
Published on

பொதுமக்களின் அன்றாட யுபிஐ (UPI) டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமானக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், இது முற்றிலும் இலவசமாகவே தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007'-இன் பிரிவு 10A-இல் உள்ள 'பூஜ்யக் கட்டணம்' (Zero MDR) விதிகளைத் திருத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதையடுத்து, "யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது; இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும்" என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசம்

சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள் போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

வணிகர்களுக்கு மட்டுமே

எம்டிஆர் (MDR) என்பது நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் (0.05% முதல் 0.5% வரை) விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நிதிக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை

சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்களுக்கு இந்த MDR கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். பெரிய வணிகர்களிடமிருந்து திரட்டப்படும் இந்தச் சேவைக் கட்டணம், வங்கி அமைப்புகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சைபர் மோசடித் தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப் பயன்படும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே, இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தலைமையிலான யுபிஐ வழிகாட்டுதல் குழு இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும்.

சீதாராமன் பதிலடி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணச் சுமை இறுதியில் பொருட்களின் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீதே சுமத்தப்படும்" எனக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், வதந்திகளை பரப்பும் முன் காங்கிரஸ் தலைவர்கள் சில உண்மைகளை புரிந்துகொண்டு ஆக்கப் பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும். இது தவறான வதந்தி என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com