ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு.. புதிய விசாரணைக்கு முதல்வர் சுவேந்து உத்தரவு - 3 திரிணாமுல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

"எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என அவர் கூட்டத்தில் பேசினார்.
முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத்
முதல்வர் சுவேந்து, ரத்னா தேப்நாத்
Published on

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.

அஞ்சலி

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொல்லப்பட்ட மருத்துவருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இச்சம்பவத்தின் நினைவாக நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும், பாணிஹாட்டி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ரத்னா தேப்நாத் கலந்துகொண்டார்.

"எங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என அவர் கூட்டத்தில் பேசினார்.

இந்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இது நடந்த நிலையில் இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.

புதிய விசாரணை

இந்நிலையில் பெண் மருத்துவர் உடலை அவசர அவசரமாகத் தகனம் செய்தது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பரேக்பூர் காவல்துறை ஆணையருக்கு முதல்வர் சுவேந்து அதிகாரி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை சில மணி நேரங்களிலேயே முடிக்கப்பட்டு, அன்றைய தினமே உடல் அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டது.

தகனம் செய்ய வேண்டிய உடல்களின் பட்டியலில் அந்த உடல் 3வது இடத்தில் இருந்த நிலையில், அது விதிமுறைகளை மீறி 1வது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி இறந்தவரின் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தி ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும், ஆனால் இங்கு அது நடக்கவில்லை என சுவேந்து குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நிர்மல் கோஷ், பஞ்சாயத்து உறுப்பினர் சோமநாத் டே, உள்ளூர் தலைவர் சஞ்சீவ் முகர்ஜி ஆகிய மூவர் மீதும் குற்றம்சாட்டியுள்ள சுவேந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பணியிடை நீக்கம்

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையைச் சரியாகக் கையாளாதது மற்றும் பெற்றோருக்குப் பணம் கொடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, கொல்கத்தாவின் முன்னாள் காவல் ஆணையர் வினீத் கோயல் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளைச் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இந்த மாத தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com