

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். "நார்கோ-தீவிரவாதிகளுக்கு இனி எங்கும் அடைக்கலம் இருக்காது; அவர்களை வேட்டையாடி சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என்று அவர் எச்சரித்தார்.
கந்தர்பாலில் நடைபெற்ற 'நஷா-முக்த் ஜம்மு & காஷ்மீர்' (போதை இல்லா ஜம்மு-காஷ்மீர்) இயக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 55 நாட்களில் 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,128 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 700 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 130 சந்தேக நபர்களின் பாஸ்போர்ட்களை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறிய சின்ஹா, இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அல்ல, தேசிய பாதுகாப்புக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் நேரடி அச்சுறுத்தல் என கூறினார். அதே நேரத்தில், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என்றும், மறுவாழ்வு, ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், "நார்கோ-தீவிரவாதிகளுக்கு இனி தஞ்சம் இல்லை" என்று மனோஜ் சின்ஹா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கந்தர்பாலில் உள்ள மாதா கீர் பவானி கோவிலில் ரூ.3.85 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய யாத்ரி பவனையும் அவர் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் ஒரே நேரத்தில் 900 பக்தர்கள் தங்கும் வசதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.