

ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில், வேறு இடங்களில் "சமூக விரோத சக்திகள்" வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக வரும் செய்திகள் தனக்கு வேதனையளிப்பதாக கூறிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நடைபெற்று வரும் மாணவர் இயக்கத்தின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 26-வது நாளைக் குறிக்கும் வகையில், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட வாங்சுக், "அமைதி, அமைதி மட்டுமே எனது வழி.
ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வரும் வேளையில், வேறு சில இடங்களில் சமூக விரோத சக்திகள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக அறிவது எனக்கு வேதனையளிக்கிறது.
எதிர் தரப்பினர் என்ன செய்தாலும், நமது பதில் மலர்களை போல மென்மையாகவே இருக்க வேண்டும். தயவுசெய்து எக்காரணம் கொண்டும் இந்த மரபை கைவிடாதீர்கள்," என்று வாங்சுக் கூறினார்.
ஜூலை 20 அன்று நடைபெற்ற 'சன்சத் சலோ' போராட்டத்திற்குப் பிறகு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த பேரணியின்போது, நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் தடியடி மூலம் தடுத்தது. பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் டேஸர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து, மாணவர் இயக்கத்தை வன்முறை சார்ந்ததாக சித்தரிக்கவும், தலைநகரின் பிற பகுதிகளில் நடந்த சம்பவங்களுடன் அதை தொடர்புபடுத்தவும் முயற்சிகள் நடப்பதாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்தது.
முன்னதாக, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ வெளியிட்ட 'எக்ஸ்' தள பதிவில், "கடந்த சில நாட்களாக இந்தியாவின் 'ஜென்-இசட்' (Gen Z - தற்போதைய இளம் தலைமுறை) இளைஞர்களை பார்ப்பது எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அந்நியர்களை குடும்பத்தினர் போல கவனித்துக்கொண்டனர், உணவு மற்றும் தண்ணீரை பகிர்ந்துகொண்டனர், தங்கள் போராட்ட இடங்களை சுத்தப்படுத்தினர், முதியவர்களை கவனித்துக்கொண்டனர்.
'ஜன கண மன' மற்றும் நம்பிக்கையூட்டும் பாடல்களை ஒன்றிணைந்து பாடினர், கடும் தூண்டுதல்களுக்கு மத்தியிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். எண்ணற்ற தன்னலமற்ற சேவைகள்" மூலம் இந்த இயக்கத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தனர்," என்று கூறினார்.
இந்த போராட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதியன்று இணைந்த வாங்சுக், அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் குருகிராமில் உள்ள மேடான்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.