

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட் எனும் எஃகு ஆலையின் உருக்கு பட்டறை-1-ல் உருகிய எஃகு சம்பந்தப்பட்ட வார்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆர்.ஐ.என்.எல் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் எட்டு பேர் உயிரிழந்ததற்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
மேலும் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் கருணைத்தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் இதர உதவிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது எனவும் அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
காயமடைந்த தொழிலாளர்களின் அனைத்து சிகிச்சைச் செலவுகளையும் ஆர்.ஐ.என்.எல் ஏற்கும் என்றும், கடுமையாகக் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார்.