

நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் கேரள மாநிலம் முதல்வர் சதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக போலீசார் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக மத்திய அரசு மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளது. ஆனால், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தடியடி மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள். அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.
எர்ணாகுளத்தில் பாடகர் வேடன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், கேரளாவில் நிபந்தனையற்ற வகையில் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு உட்பட்டோரை கிரிமினல் ரெக்கார்டு இல்லாமல் விடுவிக்க வேண்டும். போராட்டம் தொடர்பான வீடியோக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி மட்டுமல்லாமல் பாஜக ஆளும் பீகார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் மாணவர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.