4 இந்திய மாலுமிகள் பலி: ரஷிய தூதரை அழைத்து கண்டித்த இந்தியா..!

உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
Russian Charge d'Affaires Vladimir Ladanov
ரஷிய தூதர்
Published on

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. 10 மாலுமிகள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இந்தியாவுக்கான ரஷிய தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதரக பொறுப்பாளர் விளாடிமிர் டேலனவ்-க்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்திற்கு வந்து ஆஜரானார். அப்போது அவரிடம் இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது

ஞாயிற்றுக்கிழமையன்று எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, இந்தியா தனது கடுமையான கவலையையும் தெளிவான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல்களை குறிவைப்பதும், அதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் தீவிர கவலைகளைத் தங்கள் நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ரஷ்யத் தூதரகப் பொறுப்பாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இவ்வாறு அறிக்கையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஒடெசா துறைமுகம்

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். எம்.வி. கோல்டன் லியோ (MV Golden Leo) என்ற அந்தக் கப்பலில் ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 4 இந்தியர்கள், 5 சிரியாவைச் சேர்ந்தவர்கள் பலியானார்கள். ஒரு இந்தியர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா, உக்ரைனின் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை கடற்பகுதியில் நடத்தியது. அதில் ஒன்றுதான் வணிக கப்பல் மீதான தாக்குதல். ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருடத்திற்கு மேலான போரில், கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com