

முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் தங்கி இருந்த விஜய், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் கர்நாடக மாநிலம் மங்களூர் புறப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் முடிந்ததும் முதலமைச்சர் விஜய் காரில் மங்களூர் விமான நிலையம் செல்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதால் அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக போலீசாரிடம் தமிழக போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து உடுப்பி மாவட்ட போலீசார், மூகாம்பிகை கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் பயணம் செய்யும் பாதை, மூகாம்பிகை வனப்பகுதியாகும். சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகு தியை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த பகுதியில் சந்தேகத்திற்கி டமாக நடமாடும் நபர்களை கண்காணிக்கும்படி, வனத்துறை ஊழியர்களுக்கு போலீசார் உத்தர விட்டுள்ளனர். இதையடுத்து, விஜய் பயணம் செய்யும் விமான நிலையம், கோவில் வளாகம் மற்றும் பயண பாதைகளில் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.
உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது.