இது இந்தியா அல்ல, பிரான்ஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - பின்னணி என்ன?

ஊழியர்களின் வேலைநேரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் கணினி அமைப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியா அல்ல, பிரான்ஸ்: இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் - பின்னணி என்ன?
Published on

பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு இணங்காததால், இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது அந்நாட்டு தொழிலாளர் நல ஆணையம்.

நிறுவனத்தின் வேலை நேரங்களைப் பதிவு செய்யும் முறை, அந்நாட்டின் தொழிலாளர் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது. ஊழியர்கள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் நேரங்கள் முறையாகப் பதியப்படவில்லை; வேலை நேரப் பதிவுகளை தணிக்கை செய்யவோ அல்லது ஆய்வுக்கு உட்படுத்தவோ தகுந்த ஆதாரங்கள் இல்லை.

சில குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களின் கூடுதல் பணி நேரத்தை நிறுவனத்தின் மென்பொருளால் கண்காணிக்க முடியவில்லை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை துல்லியமாக பதிவு செய்யப்படவில்லை என இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு சட்டம் கூறுவது என்ன?

பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தின்படி, முதலாளிகள் ஊழியர்களின் வேலை நேரங்கள் குறித்த துல்லியமான பதிவுகளைப் பராமரிக்க வேண்டும் . அங்கு வாரத்திற்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக அனுமதிக்கப்படுகிறது.

ஊழியர்களின் தினசரி, வாராந்திர ஓய்வு நேரங்கள் மற்றும் கூடுதல் வேலைக்கான ஊதியம் ஆகியவை சட்டப்படி துல்லியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதில்

இந்த அபராதம் தங்களது நிதிநிலை, செயல்பாடுகள் அல்லது பிற வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா அல்ல, பிரான்ஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என். ஆர். நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து ஏற்கனவே இந்தியாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பிரான்சில் ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்டங்களின்படி இன்போசிஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் "இது இந்தியா அல்ல, பிரான்ஸ்" என தலைப்பிடப்பட்டு, இந்த செய்தி இணையவாசிகளால் பரப்பப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com