

கேரளா கோழிக்கோட்டில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மேலும் ஒரு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆபரேஷன் தூஃபான்
கேரளாவில் போதை பொருட்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற நடவடிக்கை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இதுவரையில் 8109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் சில நபர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சமீபத்தில் செயற்கை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
கடந்த சில மாதங்களில் ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெரும் நிதிப் பரிவர்த்தனைகளும், அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதையடுத்து அவர்கள் கணக்கில் பெருமளவிளான பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனா கே.சி மற்றும் கே. காவ்யா ஆகிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் கைது
இந்நிலையில் பேரம்பரா பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த 30 வயதான வி.பி. நீஷ்மா என்பவரை காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகளில் நடைபெறும் போதைப்பொருள் எதிர்ப்பு நடன நிகழ்ச்சிகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் செயற்கை போதைப்பொருட்களையும் பயன்படுத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து வடகரா ஆய்வாளர் ஏ.வி. தினேஷ் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு செயற்கை போதைப்பொருட்களை விநியோகிக்கும் கும்பலில் ஆசிரியர்களும் அங்கம் வகித்துள்ளனர்.
அவர்கள் சமூக ஊடகக் குழுக்களைப் பயன்படுத்தி, கியூஆர்(QR) குறியீடுகளை பகிர்ந்து ஆன்லைனில் பணம் பெற்றுள்ளனர்.
இந்த போதைப்பொருள் விற்பனைக்கு வளைகுடா நாட்டைச் சேர்ந்த ஒரு கைபேசி எண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்தது மற்றும் மங்களூரில் உள்ள சில நபர்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.