

நீட்-யுஜி மருத்துவ மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான முறைகேடு மற்றும் தவறான தகவல்களை தடுக்கும் நோக்கில், இந்திய அரசு டெலிகிராம் செய்தி பரிமாற்ற செயலியை 2026 ஜூன் 22 வரை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-இன் கீழ் இந்த அவசரகால தடையை விதித்தது.
இந்தியாவில் ஒரு தேர்வுக்காக இந்த அளவில் ஒரு செயலி கட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் இந்த தடை குறித்து டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்,
“ இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், BGP ஹைஜாக்கிங் எனப்படும் ஒரு முறைகேடான வழிமுறையின் மூலம், இந்தியாவிற்கு வெளியே (ஐக்கிய அரபு அமீரகம் உட்பட) உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் பயன்பாட்டை சீர்குலைத்து வருகிறது.
ரிலையன்ஸ் பல புகார்களைப் புறக்கணித்துள்ளதால், இந்தச் சீர்குலைப்பு வேண்டுமென்றே செய்யப்படுவதாகத் தெரிகிறது. வாட்ஸ்அப்பை உருவாக்கிய நிறுவனமான மெட்டா, ரிலையன்ஸின் ஒரு பகுதி உரிமையாளராக இருப்பதால், இது ஒரு போட்டிப் போரின் பகுதியாக இருக்கலாம்.
உலகளாவிய இணைய வழித்தடத்தின் இத்தகைய முறைகேடு கவலை அளிக்கிறது. இந்தியாவில் டெலிகிராமை தடை செய்வதற்கான சமீபத்திய பரப்புரை முயற்சிக்கு பின்னணியில் ரிலையன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களும் இருந்திருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்திய அரசாங்கம் டெலிகிராம் தளத்திற்கு விதித்துள்ள தற்காலிக தடையை எதிர்த்து, அந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்துள்ளது.