தெலுங்கானாவில் மென்பொருள் பொறியாளர் சடலமாக மீட்பு

பண்ணை வீட்டில் நடந்த அலுவலக விருந்தின்போது 27 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
Telangana Techie Mysterious Death
Published on

தெலுங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், வார இறுதி ஒன்றுகூடல் விருந்து நேற்று நடைபெற்றது.

இந்த விருந்தின் போது ​​27 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த காண்ட்லா ராமு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ராமந்தாபூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

முன்னதாக சுமார் 15 அலுவலக சகாக்கள் மற்றும் குழுத் தலைவருடன் ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு குழுவாக விருந்துக் கொண்டாட்டங்களைத் தொடங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவுக்குப் பிறகு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ராமு சுயநினைவின்றி காணப்பட்டார். அவரது சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது ​​இறந்தவரின் உடலில் சில காயங்கள் காணப்படதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பண்ணை வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதால் கொலைக்கான விவரங்களைச் சேகரிப்பதற்காக விருந்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பிரேதப் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com