பாலியல் வன்கொடுமை வழக்கில் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
தருண் தேஜ்பால்
தருண் தேஜ்பால்
Published on

2013 இல் இளம் பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 'தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2013 நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.

ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேல்முறையீடு

இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.

தீர்ப்பு

இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

இந்நிலையில் விசாரணை முடிவில் இன்று(ஆகஸ்ட் 6) 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சந்தேகர் அடங்கிய கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம்

தருண் தேஜ்பால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரங்களை உயர் நீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக தருண் தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றைய அமர்வில், தனக்கு 61 வயதாகிறது என்றும், ஒரு மனைவி இருப்பதாகவும் தானே இதில் பாதிக்கப்பட்டவன் எனவும் கூறி, தனக்கு கருணை காட்டுமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேஜ்பால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த உத்தரவை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்குறமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com