

திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நிஜாம்பட்டினம் துறைமுகப் பகுதியை சேர்ந்த மோபிதேவி மோகனராவ் என்பவரின் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடலில் இருந்து 4.4 கி.மீ. தொலைவில் ஒரு படகு பாதி மூழ்கிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அவர்கள் உடனடியாக அங்கு சென்று அந்த படகில் மீனவர்கள் யாரேனும் உள்ளனரா என்று அருகில் சென்று பார்த்தனர்.
அதில் யாரும் இல்லாததால் துறைமுகத்தில் உள்ள மெரைன் போலீசார், கடலோர காவல்படை, மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக படகுகளில் சென்ற அதிகாரிகள் பாதி மூழ்கிய நிலையில் கிடந்த படகை வெளியே இழுக்க முயன்றனர்.
அதனை இழுக்க முடியவில்லை. இதனால் மற்றொரு படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். படகில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கொண்டு அது இலங்கை படகு என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகில் வலைகள் மட்டுமே இருந்தன. இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க வந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அதிலிருந்த மீனவர்கள் தப்பி சென்றதால் படகு அடித்து வரப்பட்டதா, அல்லது வேறு யாராவது இந்த படகில் அனுமதியின்றி இந்தியாவுக்கு வந்தார்களா என கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.