மணிப்பூர் சட்டசபை தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 76.04 சதவீதம் வாக்குப்பதிவு

மணிப்பூர் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
மணிப்பூர் சட்டசபை தேர்தல்
மணிப்பூர் சட்டசபை தேர்தல்
Published on

5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 28-ந் தேதி நடந்தது. 2-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 8.38 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்பூர், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்நிலையில், மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்பு நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி மொத்தம் 76.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மணிப்பூர் உள்பட 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com