

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கல்குவாரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் சில நிறுவனங்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனங்களில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து கொச்சியில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தனித்தனி வாகனங்களில் குவாரிகளுக்கு சென்றனர். அவர்கள் திருவனியூர், மூவாட்டுபுழா, நெடுங் குன்னம் மற்றும் போத்த மங்கலம் ஆகிய இடங்களில் செயல்படும் கல்குவாரி நிறுவனங்களில் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மூவாட்டு புழாவில் உள்ள கல்குவாரி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையிட வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் முக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
நெடுங்குன்னம் பகுதியில் உள்ள நிறுவனத்துக்கு அதிகாரிகள் சென்றதும் அங்கிருந்த ஊழியர்கள் ஆவணங்களை கழிவறையில் போட முயன்றனர். மேலும் நிறுவனங்களின் கணக்குகள் பதிவு செய்யப்பட்ட பென்டிரைவ் மற்றும் ஆவணங்களை அருகில் உள்ள புதர்களுக்குள் வீசி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் தனியாக அறை அமைத்து அதில் இருந்த ரேக்கில் கத்தை கத்தையாக ரொக்க பணம் மறைத்து வைத்திருந்தனர். இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் கணக்கில் வராத ரூ.2 கோடியை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சோதனை நடந்த நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சிலர் அரசியல் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறும் போது, சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கறுப்புபண பரிவர்த்தனை மற்றும் வரிஏய்ப்பு புகார்களை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.250 கோடி அளவில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனங்களை கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.