கார் ஆலைக்குள் புகுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு

கார் ஆலையில் புகுந்த சிறுத்தைப்புலியை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர்.
சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலி
Published on

புனே:

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சாகான் எம்.ஐ.டி.சி. பகுதியில் பிரபல கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்சின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிவதை காவலாளிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ஆலை ஊழியர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். மேலும் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் வனத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் கார் ஆலைக்கு வந்தனர். அவர்கள் சிறுத்தைப்புலியை பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதில் சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 11.30 மணியளவில் வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி 3 வயது ஆண் சிறுத்தைப்புலியை பிடித்தனர்.

பிடிபட்ட சிறுத்தைப்புலி மருத்துவ சோதனைக்கு பிறகு வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். கார் ஆலையில் சிறுத்தைப்புலி புகுந்ததால் நேற்று காலை புனேயில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com