

கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் பி டீம் என பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முக்கிய தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஜூலை 19-ம் தேதி அன்று நடந்த மருந்தியல் தேர்விலும் கூட மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை உருவாக்கினார். ஆனால் பொறுப்புக் கூறல் குறித்து கேள்விகள் எழும்போது இருவரும் மவுனமாகி விடுகிறார்கள். சிஜேபி அவரது 'பி டீம்’ ஆகும். ஏனெனில், அவரது ஆதரவாளர்களால், அவரது பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் சி.ஜே.பி.க்காக ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவிலான கட்டண விளம்பர பிரசாரத்தை மேற்கொண்டது.
ஒருபுறம் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள், மறுபுறம் தங்கள் சொந்தப் பொறுப்புக் கூறல் என்று வரும்போது, மவுனமாகி மறைந்து விடுகிறார்கள்.
பஞ்சாபில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து சி.ஜே.பி.யோ, கெஜ்ரிவாலோ பேசுவதில்லை. அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.
மக்கள் வீதிகளுக்கு வரவேண்டும். டெல்லியும் நேபாளத்தைப் போல மாறவேண்டும் எனக்கூறி கெஜ்ரிவால் தினமும் காணொலிகளை வெளியிடுகிறார்.
பஞ்சாப் முதல் மந்திரி தொடர்பற்ற மற்றும் தெளிவற்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது முற்றிலும் தவறானது. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பஞ்சாப் கல்வி மந்திரி உடனே பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.