கற்பழிப்பை உறுதிசெய்யும் உடல் பரிசோதனைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது.பாலியல் பலாத்கார வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
கற்பழிப்பை உறுதிசெய்யும் உடல் பரிசோதனைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

புதுடெல்லி :

பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இருவிரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்க வேண்டும்.

இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com