மாணவர்கள் போராட்டம் வெற்றி.. ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்தார்
Union Education Minister Dharmendra Pradhan resigns
Published on

நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வரும் சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில்,

கடந்த 10 நாட்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையை கொடுப்பதாக உள்ளது.

இளைஞர்கள் குழப்பமான மனநிலையில் சிக்குவதையோ, தேசவிரோத சக்திகள் இந்த சூழலை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது முதன்மையான நோக்கம்.

மாணவர்கள் சட்ட சிக்கலில் நேரத்தை வீணடிக்காமல், படிப்பிலும் தொழில் வாய்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தனக்கு வழிகாட்டியாக இருந்து, அத்தனை ஆதரவுகளையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பூரி ஜெகநாதரின் ஆசியுடன், ஒடிசா மக்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

தொடர் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் வலுவடைந்துள்ளது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டுவருகின்றன.

20 நாட்களுக்கும் மேலாக வாங்சுக் உண்ணாவிரதம்

இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கரப்பான் பூச்சி கட்சியினர் உற்சாக முழக்கம்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்பு வெளியானதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com