

தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
72 வது தேசிய விருதில் பிரம்மயுகம் திரைப்படத்திற்காக தனது நான்காவது தேசிய விருதை வென்ற மம்மூட்டி, தற்போது நாடு முழுவதும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்கள் நமது தேசத்தின் பொக்கிஷம்; அவர்களின் குரலுக்கு செவி சாயுங்கள்.
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்; அவர்களுக்கு வலுவூட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
நடிகர் துல்கர் சல்மான் அந்த பதிவில்:-
ஜந்தர் மந்தரில் நடப்பது, சற்று நின்று செவிமடுத்து புரிதலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும்.
கல்வி என்பது எப்போதுமே நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியை பற்றியதாகவே இருந்து வந்துள்ளது.
இளம் வயதினர் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதை காண்பது மனதை பிழிவதாக உள்ளது.
சில மாணவர்கள் தங்களுக்கு முன்னேற வழியே இல்லை என்று உணர்வதை அறிந்து என் இதயம் நொறுங்கியது.
மாணவர்களின் தற்கொலை செய்திகளை கேட்பது வேதனை அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களின் கனவுகள் நனவாவதை உறுதிசெய்ய, வலி மற்றும் கடன் என்ற இரட்டை சுமையை சுமக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு கருத்திற்கும் அப்பால், இரக்கத்திற்கும் மரியாதைக்கும் தகுதியான கனவுகள், லட்சியங்கள், குடும்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை கொண்ட தனி நபர்கள் உள்ளனர்.
அர்த்தமுள்ள உரையாடல்கள், அமைதியான தீர்வுகள் மற்றும் ஞானம் ஆகியவற்றால் வழி நடத்தப்படும் முடிவுகள் ஏற்பட வேண்டும்.
பிரிவினை மற்றும் வன்முறையின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தை விட, புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலம் எப்போதும் வலிமையானதாக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.