சிக்கிம்: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 7 பேர் பலி.. ஏனையோரை மீட்கும் பணி தீவிரம்

வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
Sikkim tragedy
Sikkim tragedy
Published on

சிக்கிமில் நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் திடீர் நிலச்சரிவு காரணமாக உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு

சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சாமர்துங் சுரங்கப்பாதைக்கு வெளியே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழையினால் மலைச்சரிவில் இருந்து பெருமளவில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.

நிலச்சரிவு ஏற்பட்ட போது சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கப்பாதைக்குள் மீத்தேன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.

நிலச்சரிவினால் ஏற்பட்ட பாறை முறிவுகள் மற்றும் நிலத்தடி அடுக்குகளின் அதிர்வு காரணமாகவே இந்த இயற்கை வாயு கசியத் தொடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசியத் தொடங்கியது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

வாயு கசிவு காரணமாக உள்ளே செல்ல முயன்ற சில மீட்புப் படை வீரர்களுக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

வாயு கசிவை சமாளிக்கும் வகையில், அதிநவீன வாயு கவசங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்புப் பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

மீட்புப் படையினர் சிறப்பு மாஸ்க்குகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நவீன துளையிடும் கருவிகளின் உதவியுடன் அடைபட்டுள்ள நுழைவு வாயிலைத் தோண்டி உள்ளே செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சுரங்கப்பாதையின் குறுகிய அமைப்பு, புகை மற்றும் வாயு கசிவால் ஏற்பட்டுள்ள மோசமான பார்வைத்திறன் ஆகியவை மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியுள்ளன.

சுரங்கத்தில் இருந்து வெளியே அழைத்துவரப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்களும், மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்திலேயே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

உள்ளே சிக்கிய தொழிலாளர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் அனுபமா தாம்லிங் இது குறித்து தெரிவிக்கையில்,

'சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னமும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அது தற்போதைய மதிப்பீட்டை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com