

போபால் :
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு, பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று யேலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏர்மார்ஷல் மன்விந்தர் சிங், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முப்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், விமானப்படை விமானம் மூலம் வருண்சிங் உடல், மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் உடன் சென்றனர். அங்கு வருண்சிங் உடலுக்கு அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், வருண்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று கூறினார். வருண்சிங்குக்கு சிலை எழுப்பப்படும் என்றும், ஒரு நிறுவனத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.