

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லியில் உள்ள 'வெளிநாட்டு செய்தியாளர்கள் சங்கத்தில்' (FCC) இணைய வழியில் வரும் ஆகஸ்ட் 5 பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.
2023 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் அவரின் தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் மாளிகையை போராட்டாக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
அதுமுதல் மத்திய அரசின் அடையாளத்தில் இருக்கும் அவரின் இருப்பிடம் குறித்த தகவல் பொதுவெளியில் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவுகள் மூலம் மட்டுமே அவர் வெளியுலக தொடர்பு கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து, அதாவது இந்தியாவுக்கு தப்பி வந்து ஆகஸ்ட் 5 உடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அன்றைய தினம் ஹசீனா முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.
அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தடுத்து நிறுத்தும்படி, வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள தார்பிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி அரசு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதியை சந்தித்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வெளியுறவு ஆலோசகர் ஹுமாயூன் கபீர், இந்திய மண்ணைப் பயன்படுத்தி வங்கதேசத்தில்பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அரசியல் கருத்துக்களைக் கூறும் வகையிலோ ஷேக் ஹசீனாவோ அல்லது பிறரோ செயல்பட அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் கடந்த ஆண்டு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டத்தை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனவே தண்டனையை நிறைவேற்ற அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஷேக் ஹசீனா நடத்த திட்டமிட்டுள்ள பத்திரிகையாளர் சந்திப்புடன் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் விளக்கம் அளித்துள்ளார்.
ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நீங்கள் குறிப்பிடும் இந்தச் சந்திப்பு ஒரு தனியார் ஊடக அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கோ தொடர்போ இல்லை. அதில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தையும் இந்திய அரசு ஆதரிக்கவோ ஏற்கவோ செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதிலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஹசீனா தெரிவித்திருந்தார்.
எனவே தனது நாடு திரும்பும் திட்டம் மற்றும் எதிர்காலம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஹசீனா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.