

இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்.
கர்நாடகாவை சேர்ந்த ராஜேஷ் மேத்தா என்பவரால் நடத்தப்பட்டு வரும் இந்நிறுவனம் தங்களின் உண்மையான வருவாய்க்கு மாறாக பல லட்சம் கோடியை மிகைப்படுத்தி கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2024இல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குதாரர் ஒருவர் அளித்த ரகசிய புகாரின் பேரில் இந்த விவகாரம் குறித்து இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரித்தது.
இந்நிலையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தங்கள் கணக்கு விபரங்களில் சுமார் ரூ.15.15 லட்சம் கோடி வருவாயை தவறாக காட்டியதை செபி கண்டறிந்துள்ளது.
எனவே நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான ராஜேஷ் மேத்தா பங்குச் சந்தை மற்றும் இந்த நிறுவனப் பங்குகளில் வர்த்தகம் செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்சி) ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் அளவு சரிந்து லோயர் சர்க்யூட் ஆகி ரூ.104.65 என்ற விலையைத் தொட்டது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இன்று பங்குச்சந்தை தொடங்கியது முதலும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5% சரிவுடன் லோயர் சர்க்யூட்டியிலேயே நீடிக்கிறது.
செபி அறிக்கை:
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் முறைகேடு தொடர்பாக கடந்த ஜுன் 3 செபி வெளியிட்ட 109 பக்க அறிக்கையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது கணக்குகளில் காட்டியுள்ள ஒட்டுமொத்த வருவாயில் 97% முதல் 99% வரையிலான வர்த்தகம் முற்றிலும் உண்மைக்கு மாறான மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ளது.
மேலும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2021 முதல் 2024க்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில் தங்களின் தனிப்பட்ட வருவாயிலும் ரூ.12,557 கோடி முறைகேடு செய்துள்ளதாகச் செபி குற்றம் சாட்டியுள்ளது.
மாயத் தோற்றம்
தங்கம் சுத்திகரிப்பு வணிகத்தில், சுத்திகரிப்பு செய்வதற்கான கட்டணம் அல்லது கமிஷன் தொகையை மட்டுமே நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கில் செயல்பாட்டு வருவாயாகக் காட்ட வேண்டும்.
ஆனால் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், தாங்கள் கையாண்ட ஒட்டுமொத்த தங்கத்தின் முழுப் பரிவர்த்தனை மதிப்பை (Gross Transaction Value) வருவாயாகக் காட்டி கணக்குகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய தங்கம் நிறுவனமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளவும், தங்களின் சந்தை மதிப்பை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்கவுமே இந்த மாயத் தோற்றத்தை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, செபி விதித்துள்ளது இடைக்கால தடை தான் என்றும் விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றும் ராஜேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.