

கேரளாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சியில் இடம்பெற்ற வீர சாவர்க்கர் தொடர்பான கேள்வி, தற்போது மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வினாடி வினாவில், "ஆங்கிலேயர்களால் மிகக் கடுமையான தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பதிலாக வி.டி. சாவர்க்கர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கேள்வியின் வரலாற்று அணுகுமுறை குறித்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு, சங் பரிவார் திட்டத்தை கல்வித்துறையில் அனுமதிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளன.
இதையடுத்து, கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த வினாடி வினா அரசின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் நடத்தப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கேள்வியைத் தயாரித்தவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக அறிவியல் மன்றம் அல்லது பொதுக் கல்வித் துறை ஆகியவற்றின் செயல்பாட்டுத் திட்டத்தில் இந்த வினாடி-வினா நிகழ்ச்சி இடம்பெறவில்லை. மேலும், கேள்விகளைத் தயாரிக்கவோ அல்லது போட்டியைத் தனிப்பட்ட முறையில் நடத்தவோ இவ்விரு அமைப்புகளும் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று கல்வித்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் யு.டி.எஃப். (UDF) அரசு "கூட்டுச் சதி" செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும் சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், கேரளாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சிகளின் பின்னணியிலும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பொதுக் கல்வித் துறையை "காவிமயமாக்குவதற்கும்", சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே அந்த வினாடி-வினா (quiz) கேள்வி அமைந்திருந்ததாக முன்னாள் பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி குற்றம்சாட்டினார்.
ஆங்கிலேயர்களிடமிருந்து மிகக் கடுமையான தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகச் சாவர்க்கரைச் சித்தரிப்பது ஆட்சேபனைக்குரியது என்று கூறிய அவர், அக்கேள்வி தவறான வரலாற்றைப் பரப்பும் முயற்சியாக அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவன்குட்டி வலியுறுத்தினார்.
மேலும், பொதுக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.