சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனையில் ரூ.17 லட்சம் முறைகேடு: கேரள உயர்நீதிமன்றம் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆதி சிஷ்ட நெய்யில் நிதி முறைகேடு எழுந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
 Sabarimala Ayyappa Ghee
Published on

கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா(ஐயப்பன்) கோவிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில், கடந்த நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 27, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

கேரள ஐயப்பன் கோவில் நெய் விற்பனை முறைகேடு:

இந்த கால கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 பாக்கெட் நெய்யில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் 43 பேர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நெய் பாக்கெட்டின் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செலுத்தப்படவில்லை என்றும், இதனால் ரூ.17 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டின் ஊழல் தடுப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.

நீதிபதிகள் விசாரணை:

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அமர்வு, “இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் கீழ் குற்றங்களாக பதிவுசெய்யப்படும்.

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனைக்குரிய குற்றங்கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலைகளில் இந்த விவகாரத்தை வெறும் நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com