

இந்தியா தனது எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளை உள்நாட்டில் உருவாக்கி வருகிறது. அவை வெவ்வேறு தூரங்களில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது ஐதராபாத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 300கி.மீ தொலைவு வரை தாக்கும் ‘ருத்ரா எம்-II’ கதிவீச்சு ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணை ரேடார்களை முழுவதுமாக தடுத்து நிறுத்தி, அதன் மூலத்திற்கே பின்தொடர்ந்து சென்று அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் மற்றும் ஜாமர்களை செயல் இழக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளைச் செயல் இழக்க செய்வதற்கு, தற்போது வரை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட KH-31 கதிர்வீச்சு ஏவுகணையை Su-30MKI போர் விமானங்கள் மூலம் இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்திய விமானப்படை இந்தத் திறனை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, வெளிநாட்டு இறக்குமதிகளை வெகுவாக குறைத்து வருகிறது.
இந்நிலையில் டி.ஆர்.டி.ஓ நிறுவனம் இந்தியா விமானப்படையுடன் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்ரா எம்-II வான்-தரை ஏவுகணையை வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதித்துள்ளது.
இதையடுத்து இந்திய விமானப்படையின் ஆயுதக் கிடங்கில் உள்ள ரஷ்ய KH-31 ரக கதிர்வீச்சு ஏவுகணைக்கு பதிலாக ருத்ரா எம்-II ஏவுகணை இனிவரும் காலங்களில் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.