

இந்திய ரெயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக புகார்கள் வந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ரெயில்களில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய ரெயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்திய ரெயில்வே அமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 58 கோடி எண்ணிக்கை உணவுகளை வழங்குகிறது என்றும், அவற்றில் சராசரியாக 0.0008 சதவீத புகார்கள் மட்டுமே பெறப்படுகின்றன என்றும் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரீமியம் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மோசமான உணவுத் தரம், சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் மற்றும் உபசரிப்புக் குறைபாடுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும்,
அதிகக் கட்டணம் வசூலித்தல், தரமற்ற உணவு வழங்குதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைவாக வழங்குதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஐ.ஆர்.சி.டி.சி உரிமைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் எம்.பி. சந்திரகாந்த் ஹண்டோர் விவரங்களைக் கோரியிருந்தார்.
பிரீமியம் ரெயில்களில் உணவின் தரம் குறித்துக் கவலை தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ஹண்டோரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புகார்கள் மீதான விசாரணையின் அடிப்படையில், ரூ. 5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பயணிகளுக்கு நல்ல தரமான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்க ரெயில்வே தொடர்ந்து முயன்று வருகின்றது. அதை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரப்படுகிறது.
ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவை வழங்குதல்,
அடையாளம் காணப்பட்ட இடங்களில் நவீன அடிப்படை புதிய சமையலறைகளை அமைத்தல், மற்றும் உணவுத் தயாரிப்பை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
ரெயில்களில் மின்னணு கட்டண முறை மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் கட்டண முறை மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக,
சமையலறை பெட்டிகளில் பாயிண்ட் ஆஃப் சேல் (POS) இயந்திரங்களை நிறுவுவது, அத்துடன் UPI, QR குறியீடுகள் மற்றும் ஸ்வைப் இயந்திரங்கள் போன்ற பல விருப்பங்களும் இதில் அடங்கும்” என்று பதிலளித்தார்.