

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வந்தவர் விஷ்ணு உன்னி (வயது 24). இவரும், இவரது சக ஊழியரான அருண் கிருஷ்ணனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கொச்சி கயல் பகுதியில் வெம்பநாடு ஏரி வெண்டுருத்தி பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழைகாலம் என்பதால் ஏரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வேளையில் 7 மாத கைக்குழந்தையுடன் வந்த பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக திடீரென்று தனது குழந்தையை ஏரியில் வீசினாள். பின்னர் தானும் அதனுள்குதித்தாள். இதனை பாலத்தில் நின்று பார்த்த மக்கள் பலரும் அபயக்குரல் எழுப்பினார்கள்.
யாரும் அவர்களை காப்பாற்ற முன்வராத நிலையில் விஷ்ணு உன்னி சட்டென தனது ஹெல்மெட்டை அருண் கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டு ஏரியில் குதித்தார். ஏரியில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. எனினும் விஷ்ணு உன்னி துணிச்சலுடன் நீரில் நீந்தி தாயையும் குழந்தையையும் காப்பாறினார்.
பின்னர் சுமார் 200 மீட்டர் தூரம் நீரில் நீந்தி சென்று இருவரையும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் ரோந்துப் படகிற்கு இழுத்துச் சென்றார். தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய மகிழ்ச்சி ஒருபுறம், தானும் நீரோட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற பரபரப்பான சூழலில் படகுக் குழுவினர் வீசிய பாதுகாப்பு சாதனங்களைப் பிடிப்பதற்குள் விஷ்ணு உன்னி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
கடற்படை விஷ்ணுவின் உடலை 6 மாதங்களாக தேடியது, ஆனால் அவரது உடல் மீட்கப்படவில்லை. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உடலை கூட வீட்டிற்கு கொண்டு வர முடியாததால், அவரது குடும்பத்தினருக்கு அந்த இழப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. முன்னாள் ராணுவ வீரரான விஷ்ணுவின் தந்தை உன்னிகிருஷ்ணன், தன் மகனை இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பின்றி கடந்த ஆண்டு காலமானார். அதே சமயம், அவரது தாயார் பிரபாயனியும், சகோதரி வினயாவும் இன்னும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
விஷ்ணு உன்னியின் தியாகத்தையும் வீரத்தையும் பாராட்டி, அவருக்கு மரணத்திற்குப் பின் ஜீவன் ரக்சா பதக் மற்றும் வீரத்திற்கான நாவோ சேனா பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், ஐ.என்.எஸ். துரோணாச்சார்யாவில் உள்ள பயிற்சி மாலுமிகளின் தங்குமிட கட்டிடத்திற்கு ‘விஷ்ணு’ எனப் பெயரிட்டு கடற்படை விஷ்ணுவைக் கவுரவித்தது. இந்தக் கட்டிடம் 2019-ல் அவரது பெற்றோர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படை வீரர் விஷ்ணு உன்னி தனது உயிரைத் தியாகம் செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அவரது வீரத்தைப் போற்றும் விதமாக, அவர் பிறந்த ஊரான திருத்தலா கிராம பஞ்சாயத்தில் உள்ள ஒரு சாலைக்கு ‘நவிகன் விஷ்ணு சாலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட இந்தச் சாலையின் ஒரு பகுதியை, சட்டமன்ற உறுப்பினர் வி.டி. பல்ராம் திறந்து வைத்தார். காலங்கள் பல கடந்தாலும் விஷ்ணு உன்னியின் தியாகம் என்றென்றும் மனதில் நிலைத்து நிற்கும்.