

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் லாலு பிரசாத் யாதவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"பீகாரின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், புகழுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள ரப்ரி தேவியின் இல்லத்தில் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிய முறையில் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது மகனும் பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மகள் ரோகிணி ஆச்சார்யா ஆகியோர் இந்தத் புகைப்படங்களைப் பகிர்ந்து தங்கள் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். RJD கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வாத்தியங்கள் முழங்க, மலர்க்கொத்துகளுடன் வருகை தந்து இனிப்புகள் வழங்கித் தங்கள் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினர்.
இதனைதொடர்ந்து, தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், "மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து எடுத்து வரும் உறுதியான நிலைப்பாடு, நாட்டில் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு எப்போதும் ஒரு உத்வேகம்" என்று பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முக்கியத் தலைவரான லாலு பிரசாத் தற்போது மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளின் தீர்ப்புக்குப் பின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், பீகார் அரசியலில் இன்றும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.