

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திச் செல்லும் பேரணி நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாங்கள் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட இருக்கிறோம். எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கும் வகையில் அரசியலமைப்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுவோம்.
Gen Z போராட்டம் 56 இன்ஞ் மார்பு கொண்ட பிரதமர் மோடியை வீழ்த்தியுள்ளது. தர்மேந்திர பிரதானை அவரது பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்துள்ளது.
இந்தியாவில் Gen z-ன் மக்கள் தொகை 30 சதவீதம் ஆகும். ஆனால் மக்களவையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே இருக்கிறார்கள். 21 வயதிற்கு மேற்பட்டோர் அமைச்சராக இருக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டின் எதிர்காலம் கட்டாயம் மாற்றம் அடையும்.
அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 18 வயது இளைஞர்களால் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக ஆக முடியும். சிங்கப்பூரில் கூட 21 வயதுடையோர் பிரதமராக முடியும்.
ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும். நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். தெருக்களில் குரல் எழுப்பிய பிறகு, வெறுமனே வீட்டிற்கு அவர்கள் திரும்பக்கூடாது. இந்த இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். Gen z குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.
21 வயதுடையோர் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், மேயர் பதவிகளுக்கு தகுதிடையவர்கள் ஆவார்கள். ராஜீவ் காந்தி வாக்காளர்களின் வயது வரம்பை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தார். நரசிம்ம ராவ், மேயர் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களின் வயதை 21 ஆக நிர்ணயித்தார். மாணவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.