

பொதுத்தேர்வு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?
அனைத்து கட்சியினரும் மாணவர்களின் உணர்வுகளை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் கோபத்தினால் போராட்டத்தில் ஈடுபடவில்லை, ஆதங்கத்தினால் தான் போராடினர்.
இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள். வீதிகளில் இறங்கி போராடிய இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் டெல்லியில் NEET முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
பிறர் குரலை கேட்க மறுப்போரை இன்றைய தலைமுறையினர் முட்டாள்கள் என்கின்றனர். முட்டாள்கள் மட்டுமே எங்கள் குரலுக்கு செவிமடுக்க மறுப்பர் என இளைஞர்கள் கூறுகின்றனர்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்கின்றனர். தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள்.
30 லட்சம் ரூபாய் செலுத்த பணக்காரர்கள் வினாத்தாள் பெறுகின்றனர், ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே துணை வேந்தராக உள்ளனர்.
கல்வி விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் எதிரி இல்லை, ஆர்எஸ்எஸ் தான் உண்மையான எதிரி. நமது நாட்டின் கல்வி அமைப்புகளை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது.
என்னை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் துணிச்சல் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு இல்லை. தைரியம் இருந்தால் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
முட்டாள் என குறிப்பிட்டு மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரிஜஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது கூறிய அவர்,"நாடாளுமன்றத்தில் தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்துகிறார்" என்றார்.
பொதுத்தேர்வு மசோதா குறித்து மட்டும் பேசவும், அவை மாண்பை குறைக்கும் வார்த்தை பேசாதீர் எனவும் ராகுலுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
மேலும்,"மசோதா குறித்து மட்டும் பேச வேண்டும், மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பேசாதீர்" எனவும் ராகுலுக்கு மீண்டும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.