ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?

ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
Published on

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது. இந்த தடவை, வங்கிக்கடன் வட்டி விகிதம் மாற்றம் வருமா என்பது 5-ந்தேதி தெரியும்.

3 நாட்கள் ஆலோசனை

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கின்றன.

2 மாதங்களுக்கு ஒருதடவை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவது வழக்கம். அதுபோல், இம்முறைக்கான இக்கூட்டம் இன்று மும்பையில் தொடங்குகிறது. 5-ந்தேதி வரை ஆலோசனை நடைபெறுகிறது.

மாற்றம் இருக்காது

ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார். ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கி, தற்போதைய வங்கிக்கடன் வட்டியான 5.25 சதவீதத்தில் மாற்றம் செய்யாது என்று கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பருவமழையும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.

காரணம் என்ன?

இருப்பினும், ரிசர்வ் வங்கி 'காத்திருந்து பார்க்கும்' அணுகுமுறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். பண வீக்கம் தீங்கற்ற நிலையில்தான் இருக்கிறது. எனவே தற்போதைய நிலையே தொடர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு பல தவணைகளாக ‘ரெப்போ ரேட்’ 1.5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதே வட்டிவிகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com