அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.
Plastic currency
Published on

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

முதல்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளைச் சோதனை முறையில் அச்சடித்து வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் பாலிமர் நோட்டுகள் வழக்கமான பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படும் என மக்களவையில் நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

பழைய காகித நோட்டுகள் செல்லாதா?

பழைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏப்ரலில் அறிமுகம்

வருகிற ஏப்ரல் மாதம் நீடித்து உழைக்கும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

ஒரு முன்னோட்டத் திட்டமாக ரிசர்வ் வங்கி ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் வெளியிட உள்ளது.

அதன் பயன்பாடு அடிப்படையில் கூடுதல் மதிப்புகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். முதல் கட்டமாக ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.10 மற்றும் ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் நன்மைகள்

காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.

தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.

இவற்றில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினம்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் பண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com