

இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை சட்டத்திற்கு இணங்காமல் செயல்பட்டு வந்த 135 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை RBI சட்டம், 1934 பிரிவு 45-IA (6) கீழ் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இவற்றில் எக்ஸ்பிரஸ் ஃபின்கேப் ஹவுஸ், அக்ஷய் ஃபைஸ்கல் சர்வீசஸ், டைம்ஸ் ஃபைனான்ஸ் (பி), ஜூபிடர் ப்ராஜெக்ட்ஸ் (பி), ஜூபிடர் ஃபின்வெஸ்ட், எசெல் ஃபைனான்ஸ் பிசினஸ் லோன்ஸ் மற்றும் சிட்டிவைட் ஃபைனான்சியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.
பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெரும்பாலானவை, மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியைக் கொண்டிருந்தன என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் 13 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளன.
வங்கி சாரா நிதி நிறுவன (NBFI) வணிகத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக, ஜே. தாமஸ் ஃபைனான்ஸ், எகான்-சூப்பர் சேல்ஸ், ஹித்தேஷா ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், திருநெல்வேலி தூத்துக்குடி இன்வெஸ்ட்மென்ட்ஸ், கார்னெக்ஸ் வினிமே மற்றும் இம்பாக்ட் லீசிங் ஆகிய நிறுவனங்கள் தங்களது உரிமங்களை ஒப்படைத்ததாக அந்த செய்திக்குறிப்பு தெரிவித்தது.
மேலும் பதிவு தேவையில்லாத, பதிவு செய்யப்படாத முக்கிய முதலீட்டு நிறுவனங்களுக்கான (CIC) பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்ததன் காரணமாக, ஃபோரன்னர் கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமம் ஒப்படைக்கப்பட்டது.
இணைப்பு/ ஒன்றிணைப்பு/ கலைப்பு/ தன்னார்வ நீக்கம் போன்றவற்றின் காரணமாக, அந்த வங்கி சாரா நிதி நிறுவனம் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாக இல்லாமல் போனதால்,
காஸ்பியன் இம்பாக்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஹரி தர்ஷன் சேல்ஸ், ஐவரி கன்சல்டன்ட்ஸ், எஸ்.கே.ஏ கன்சல்டன்சி சர்வீசஸ், த்ரிஷிதா மேனேஜ்மென்ட் மற்றும் சுபன் டிரேட்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை ஒப்படைத்தன என்று அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.