ஆசிரமத்துக்கு சுற்றுலா வந்திருந்திருந்த அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்- நட்பாக பழகி அத்துமீறிய 2 பேர் கைது

வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நிகில், ஜெயனை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட நிகில், ஜெயனை படத்தில் காணலாம்.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள். அதேபோன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இருந்து 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் கேரளாவுக்கு வந்திருந்தார்.

கேரளாவில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆசிரமம் ஒன்றுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்த அவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் இருந்த கடற்ரைக்கு சென்று அமர்ந்திருந்தார்.

கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவரிடம் 2 வாலிபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். நட்பாக பழகுவது போன்று பேசியதால், அவர்களுடன் அந்த பெண் பேசியிருக்கிறார். இதையடுத்து அந்த வாலிபர்கள், அமெரிக்க பெண்ணை மது குடிப்பதற்காக தங்களது இருசக்கர வாகனத்தில அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்பு 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணுக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். இதனால் அமெரிக்க பெண்ணுக்கு போதை தலைக்கேறி மயக்க நிலைக்கு சென்றார்.

இதையடுத்து அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஒரு பழைய கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போதை தெளிந்தபிறகே அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தான் தங்கியிருந்த ஆசிரம அதிகாரிகளுடம் அமெரிக்க பெண் தெரிவித்தார். அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கருநாகப்பள்ளி போலீஸ் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது செரிய ஜீக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (வயது28), ஜெயன்(39) ஆகிய இருவர் தான் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணிடம் நட்பாக பேசுவது போல் நடித்து, அவருக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து மயங்க செய்து பாலியல் பாலத்காரம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com