

நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டது. பஸ்களில் இலவச பயணம், கட்டண சலுகை என்று விதவிதமான அறிவிப்புகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருவது இனிப்பான தகவல்களாக இருக்கிறது.
அதேநேரம் இன்னும் பஸ் வசதிகளையே பார்த்திராத கிராமங்களும் இருக்கத்தான் செய்கிறது என்பதை கேள்விப்படும்போது அந்த கிராம மக்களின் நிலைமை எப்படி இருக்கும்?
அப்படித்தான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தால் கிராமத்திற்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.
இந்தகிராமத்து மக்கள் அருகில் உள்ள நகரங்கள், சந்தைகள், மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.
இப்போதுதான் முதல் முறையாக அரசு பஸ் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளது. தங்கள் கிராமத்திற்கு பஸ் வந்ததை பார்த்ததும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. அந்த பஸ் குர்தால் கிராமத்திற்குள் நுழைந்தபோது மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை திரண்டு வந்து பஸ்சை வரவேற்று சுற்றி நின்று ஆடிப்பாடி ஆரவாரம் செய்தனர்.
சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துக் கொண்டார்கள். மேளதாளங்கள் முழங்க அந்த கிராமத்தில் திருவிழா நடந்தது போல் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். பஸ் வசதி கிடைத்ததை தொடர்ந்து இனி அருகில் உள்ள நகரங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தங்கள் பயணம் எளிதாகிவிடும் என்று அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதுவரை நடந்தும், ஒரு சில தனியார் வாகனங்கள் மூலமும் அதிக கட்டணங்கள் கொடுத்து தங்கள் தேவைகளுக்காக நகரங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிவித்தார்கள்.
சுதந்திர இந்தியாவில் 79 ஆண்டுகள் வரை ஒரு கிராமம் பஸ் வசதியே இல்லாமல் இருந்திருப்பது அதிர்ச்சியான விஷயம். இதேபோல் நாடு முழுவதும் அடிப்படை தேவைகளான சாலை, போக்குவரத்து, மின்விளக்கு, குடிநீர் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.