‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!

இந்தப் புத்தக்கத்தின் முதல் பிரதியை அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்.
‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் ராகுல் காந்தி!
Published on

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய, ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தகத்தை வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி வெளியிட்ட முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தவெக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார்.

புத்தகத்தை வெளியிட்டு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி,

“வைகோ அவர்களை, அவரது உரைகள் அல்லது அவர் எழுதிய நூலுக்காக மட்டும் நான் பாராட்டவில்லை. அவரது பொதுவாழ்வுப் பயணம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய மன உறுதிக்காகவும் நான் பாராட்ட விரும்புகிறேன். ஒரு அரசியல்வாதியை நான் மதிப்பிடும்போதெல்லாம், நான் உற்றுநோக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான அம்சம் 'நிலைத்தன்மை. அதில் அவர் எப்போதும் உள்ளார்.” என வைகோவை பாராட்டினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்பாக பேசிய ராகுல் காந்தி.,

“நமது நாடு ஒரு விசித்திரமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்கி, கடும் வேதனையுடன், தேர்வுகளில் நியாயத்தையும், முறையாகச் செயல்படும் ஒரு கல்வி முறையையும் கோரி வருகின்றனர்.

மறுபுறம், அவர்களை 'மன்னிக்க' முற்படும் பிரதமரை நாம் காண்கிறோம். அவர்களை மன்னிப்பதற்கு அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் எதிர்காலத்தையே மன்னிக்கும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் எந்த அடிப்படையில் கருதுகிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை.

ஆனால், அவர் அதைத்தான் செய்யத் துணிகிறார். பிரதமரின் சிந்தனைக்கும், அவரது சகாக்களின் - குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் - சிந்தனைக்கும் பின்னால் மிகவும் ஆபத்தான மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ஒரு கருத்து ஒளிந்திருக்கிறது. அதாவது, இந்த நாடு பன்முகத்தன்மையின் வெளிப்பாடு அல்ல.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com