

பஞ்சாபில் தனியார் நிறுவனத்தில் பெண் ஊழியர் சக ஊழியரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த ஹர்விந்தர் மான் என்ற ஹாரி மற்றும் டிம்பிள் என்ற இளம் பெண் ஆகிய இருவரும் மொஹாலியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வேலை செய்து வந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
காதல் முறிவுக்குப் பிறகும் டிம்பிளுடன் மீண்டும் சேர ஹாரி தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஆனால், டிம்பிள் அதற்குத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹாரி, டிம்பிள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று இரவு அலுவலகத்தில் வைத்து டிம்பிளுடன் ஹாரி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், டிம்பிள் தனது இருக்கையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த போது, ஹாரி திடீரென அவர் பின்னால் வந்து கத்தியால் தாக்கத் தொடங்கினார்.
அங்கிருந்த சக ஊழியர்கள் ஹாரியைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும் அவர்களால் முடியவில்லை.
டிம்பிளை 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார் ஹாரி அதே கத்தியால் தனது கழுத்துப் பகுதியில் குத்திக் கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு டிம்பிளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
கத்தியால் குத்திக் கொண்ட ஹாரியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து மொஹாலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.