

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி கட்சி டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ளது. இந்த போராட்டம் காவல்துறையின் செயல்முறைகளால் கலவராமாக வெடிக்கும் சூழல் உருவாகி வரும் நிலையில், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் இதில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை மையமாக கொண்டே போராட்டம் தொடங்கியது.
ஆனால் தற்போதுவரை அவர் எந்தவொரு பொறுப்புக்கூறலையும் எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது மகளின் இணைய கணக்கு முகவரியை டேக் செய்து இணையவாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
நைமிஷா, அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் சட்டம் மற்றும் தூதரகப் பள்ளியில் தனது உயர்கல்வி பட்டப்படிப்பை முடித்தார்.
இந்தியாவில் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்ப மாணவர்கள் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சரின் மகள் வெளிநாட்டில் பயின்றதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் அவரது தந்தையை பதவி விலகக் கோரிய கமெண்டுகள் காரணமாக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நைமிஷா முடக்கியுள்ளார்.